Dienstag, 9. Oktober 2007

பெரியார் கழகம் வெளியிடும் இறுவட்டுக்கள்

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம் பகுத்தறிவு சிந்தனைகளை பரப்பும் நோக்கோடு தொடர்ந்து பல இறுவட்டுக்களை ( C D ) வெளியிட உள்ளது

வரும் வாரத்தில் இரண்டு இறுவட்டுக்கள் வெளியிடப்பட உள்ளன। கழகத் தோழர்களின் எழுச்சி உரைகளோடு வெளிவர இருக்கும் இந்த இறுவட்டுக்கள், இலவசமாகவே வினியோகிக்கப்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

முதலில் வெளிவர இருக்கும் இறுவட்டுக்களின் தலைப்புக்கள்

1। தீபாவளி தமிழர் திருநாள் அல்ல!
2। தமிழர் திருமணம் தமிழில் நடக்கட்டும்!

இந்தப் படைப்புக்களுக்கு ஆதரவு தரும்படி அனைவரையும் புரட்சிகர பெரியார் கழகம் கேட்டுக்கொள்கிறது.

பாரிஸில் தலித் மாநாடு - சிங்கள அரசின் திட்டமிட்ட சதி

பாரிஸில் நடக்க இருக்கும் தலித் மாநாடு குறித்து ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகத்தின் அறிக்கை:

அன்பார்ந்த தமிழ் மக்களே!


பாரிஸில் "தலித் மாநாடு" என்ற பெயரில் சிங்கள அரசு நடத்த இருக்கும் சதி நடவடிக்கை குறித்து உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்


தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பயனாய் ஈழத் தமிழர்கள் மத்தியில் சாதியொழிப்பு மிக வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ஈழத்தில் பயன்படுத்தப்படாத சொல்லாகிய "தலித்" என்னும் பதத்தினைக் கொண்டு பாரிஸில் ஒரு மாநாடு நடைபெற இருக்கிறது। "மாநாடு" என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், இது ஒரு சிலரின் சந்திப்பாகவே அமைய இருக்கிறது.


இச் சந்திப்பின் பின்னால் இருப்பவர்கள் உண்மையில் தாழ்த்தப்பட்ட மக்கள் அல்ல। தமிழர்களை அடிமைப்படுத்தியும், கொன்று குவித்தும் வருகின்ற சிங்கள இனவாத அரசே இச் சந்திப்பின் பின்னால் இருக்கிறது. சிங்கள இனவாத அரசு தன்னுடைய ஒட்டுக்குழுக்கள் மூலம் இச் சந்திப்பனை ஒழுங்கு செய்துள்ளது.


சில மாதங்களுக்கு முன்பு பாரிஸ் வந்த ஈபிடிபி ஒட்டுக்குழுவின் தலைவர் டக்ளஸ் தேவனந்தாவே இச் சந்திப்புகளுக்கான ஒழுங்குகளை செய்து விட்டுச் சென்றார்। பாரிஸில் இருக்கும் தன்னுடைய ஆதரவாளர்களிடம் பெரும் தொகைப் பணத்தை வழங்கிய டக்ளஸ், தொடர்ந்து பல "மாநாடுகளை" நடத்தும்படி உத்தரவிட்டுச் சென்றுள்ளார். செலவு முழுவதையும் சிறிலங்கா அரசு பொறுப்பேற்கும் என்றும் உறுதி கூறி உள்ளார்.


"தலித்" என்கின்ற பெயரில் நடக்க இருக்கும் இச் சந்திப்பின் நோக்கம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானதாக பொய்ப் பிரச்சாரம் செய்து, தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதே ஆகும்। அதற்காகவே "தலித்" என்ற பதம் எடுத்துக் கொள்ளப்பட்டது.


தமிழ் நாட்டில் எந்த நிலையிலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தருபவர்கள் பெரியார் இயக்கங்களும், தலித் இயக்கங்களுமே। இந்த ஆதரவுத் தளத்தை சிதைப்பதற்கு சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே பாரிஸில் நடக்க இருக்கும் "தலித் மாநாடு".


தந்தை பெரியார் பெயரிலும், தாழ்த்தப்பட்ட மக்கள் பெயரிலும் அமைப்புக்களை உருவாக்கி, அவைகளை விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கு பெற வைத்து, பல குழப்பங்களை உருவாக்க சிங்கள அரசு திட்டமிட்டுள்ளது। இந்த சதித் திட்டத்தின் அடிப்படையில் சில சம்பவங்கள் நடக்கத் தொடங்கி உள்ளன.


ஆகவே உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை சிங்கள அரசின் சதி நடவடிக்கைகள் குறித்து விழிப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்।


எதையும் சிந்தித்து ஆராய்ந்து செயற்பட வேண்டும் என்பதே தந்தை பெரியாரின் கொள்கை।


"கடவுள்" என்று வரும் போது, கடவுள் பக்தர்கள் எப்படி பகுத்தறிவை மறந்து, கேள்விகள் கேட்காது, ஆராய்ந்து பார்க்காது, மதத்திற்குள் மூழ்கிப் போகிறார்களோ, அதே போன்று, சில பெரியார் தொண்டர்களும் "பெரியார்", "தலித்" போன்ற சொற்களை கேட்டவுடன், பகுத்தறிவை மறந்து, ஆராய்ந்து பார்க்காது, சிங்கள அரசின் சதிக்குள் சிக்குப்பட்டு விடுகிறார்கள்।


தந்தை பெரியார் மிக அழகாகச் சொன்னார், "புலி வேசம் கட்டுபவனுடன் எச்சரிக்கையாக இருங்கள்"। அதையே எமது பெரியார் கழகமும் சொல்கிறது. "பெரியார் வேசம்", "தலித் வேசம்" கட்டுபவர்களுடனும் எச்சரிக்கையாக இருங்கள்! பகுத்தறிவோடு சிந்தியுங்கள்!


வாழ்க பெரியார் புகழ்


- ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம்

Montag, 8. Oktober 2007

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகத்தின் தீர்மானங்கள்

புலம்பெயர்ந்து ஐரோப்பில் வாழும் தமிழ் இளைஞர்களால் ஐரோப்பிய மண்ணில் பகுத்தறிவை வளர்க்கும் நோக்கோடு "ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம்" உருவாக்கப்பட்டுள்ளது

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம் தன்னுடைய முதலாவது கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்களை இயற்றியுள்ளது

  • மக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் அனைத்து செயற்பாடுகளையும் கழகம் கண்டிக்கிறது

  • மக்கள் மத்தியில் பகுத்தறிவுக் கருத்துக்களை வளர்ப்பதற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை கழகம் முன்னெடுக்கும்

  • ஐரோப்பாவில் தனி மனிதர்களாகவும் அமைப்புக்களாகவும் பகுத்தறிவு பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கழகம் பாராட்டுகிறது

  • தமிழர்கள் பல மொழிகளை கற்பதோடு தமது தாய்மொழியையும் கற்க வேண்டும் என்பதை கழகம் வலியுறுத்துகிறது

  • தாய்மொழியை கற்றுக் கொடுக்கும் பிரான்ஸின் தமிழ்சோலை, ஜேர்மனியின் தமிழாலயம் போன்ற நிறுவனங்களை கழகம் பாராட்டுகிறது

  • தமிழ்நாட்டின் சேதுசமுத்திரத் திட்டத்திற்கு தடை போடும் மதவாதிகளை கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது

  • தன்னுடைய முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்கைள நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்நாட்டிற்கு முழு உரிமையும் உள்ளது என்பதை கழகம் வலியுறுத்துகிறது

  • தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அவசியத்தை கழகம் ஏற்றுக்கொள்கிறது

  • தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் நடத்தும் போராட்டத்தின் நியாயத்தன்மைகளை கழகம் ஏற்றுக்கொள்கிறது

  • தமிழீழத்தில் மேற்கொள்ளப்படும் பகுத்தறிவு சார்ந்த பணிகளை கழகம் பாராட்டுகிறது

  • இந்தப் பணிகள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை கழகம் வலியுறுத்துகிறது

  • ஐரோப்பாவில் தலித்தியம் என்ற பெயரில் இனவாத சிறிலங்கா அரசாலும், பார்ப்பனிய வேளாள மேலாதிக்கவாதிகளாலும் மேற்கொள்ளப்படும் குழப்பகர நடவடிக்கைகளை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது

  • மக்கள் நலனுக்கு விரோதமான இந்த மேலாதிக்கவாதிகள் தமது நலன்களை நிலைநாட்டுவதற்கு தாழ்த்தப்பட்ட மக்களை பயன்படுத்த முனைவதை கழகம் வன்மையாக கண்டிக்கிறது

  • மக்கள் விரோத மேலாதிக்கவாதிகளை இனம் காணும்படி அனைவரையும் கழகம் கேட்டுக் கொள்கிறது

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகத்தின் கூட்டம் நடைபெற்றது

புலம்பெயர்ந்து ஐரோப்பில் வாழும் தமிழ் இளைஞர்களால் ஐரோப்பிய மண்ணில் பகுத்தறிவை வளர்க்கும் நோக்கோடு "ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம்" உருவாக்கப்பட்டுள்ளது।

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம் தன்னுடைய முதலாவது கூட்டத்தில் பல தீர்மானங்களை இயற்றியுள்ளது

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம்

புலம்பெயர்ந்து ஐரோப்பில் வாழும் தமிழ் இளைஞர்களால் ஐரோப்பிய மண்ணில் பகுத்தறிவை வளர்க்கும் நோக்கோடு "ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம்" உருவாக்கப்பட்டுள்ளது